திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சின்னையன்பட்டியில் 6 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோட்டையூர் - சின்னையம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்களும் 6 வயதில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஹரிஹர தீபன் என்ற மகனும் உள்ளனர். நேற்று இவர்களது பெற்றோர் வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டின் அருகே உள்ள உறவினரின் வீட்டு மாடியில் சிறுவன் ஹரிஹர தீபன் மர்மமான முறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்டோர் குழு, இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் கொண்டு தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கழுத்தறுத்து கொலை செய்த மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும், சிறுவனின் உறவினரான சந்திரசேகர் என்பவரின் மகன் அஜய் ரத்தினம் என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்படவே அவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்பொழுது சிறுவனை கொலைசெய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
சில வாரங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட சிறுவனின் அக்காவின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பியதாக அஜய் ரத்தினத்தின் மீது காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சமூக வலைதளங்களில் பரப்பியது அஜய்ரத்தினம் என உறுதிசெய்யப்பட்டது. இருந்தாலும், இரு குடும்பத்தினரும் உறவினர்கள் என்பதால் அஜய் ரத்தினத்தின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் அஜய்ரத்தினம் ஆத்திரமடைந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஹரிஹரதீபனை கொய்யாக்காய் தருவதாகக் கூறி அழைத்துச்சென்ற அஜய்ரத்தினம், அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு மாடிக்கு கூட்டிச்சென்று அங்கு சிறுவனின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு வாயில் துணியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்பு எதுவும் தெரியாதது போல் அங்கிருந்து சென்றுவிட்டார். ஹரிஹர தீபன் நீண்ட நேரமாக வீட்டுக்கு திரும்பாததையடுத்து குடும்பத்தினர் அவரைத் தேடியுள்ளனர். அப்போது உறவினர் வீட்டு மாடியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் மகன் கிடப்பதை பார்த்த சிறுவனின் தாயார் கதறி அழுதார்.
இதையடுத்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அஜய்ரத்தினத்தை கைது செய்த போலீசார் இக்கொலை வழக்கில் மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.