காரை கடத்திச் சென்ற இளைஞர் கைது pt desk
குற்றம்

கோவை: ஓட்டுநரை தாக்கிவிட்டு வாடகை காரை கடத்திச் சென்ற இளைஞர்!

மேட்டுப்பாளையம் அருகே ஓட்டுநரை தாக்கி விட்டு வாடகை காரை கடத்திச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: இரா.சரவணபாபு

கோவை போத்தனூர் சீனி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் (40). இவர் சொந்தமாக கார் வைத்து ஊபர் ஆன்லைன் புக்கிங் மூலமாக வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் சரவணம்பட்டி அருகே வாடகைக்காக காத்திருந்துள்ளார். அப்போது, மற்றொரு காரில் வந்த இளைஞர் ஒருவர், ஊட்டி செல்ல வேண்டும் எனக் கூறி அறிவழகன் காரில் பயணித்துள்ளார். அப்போது கார் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை என்ற இடத்தை கடந்த போது அந்த இளைஞர், டிரைவர் அறிவழகனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வாகனத்தை நிறுத்தச் சொல்லியுள்ளார்.

Cars

இதையடுத்து அறிவழகனை தாக்கிய அந்த இளைஞர் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து அறிவழகன் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியில் பதுங்கியிருந்த தனுஷ் (20) என்ற இளைஞரை கைது செய்து அவர் கடத்திச் சென்ற காரை மீட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிடிப்பட்ட இளைஞர் மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் முதல் வீதியைச் சேர்ந்த தனுஷ் (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தனுஷை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.