செய்தியாளர்: பிரவீண்
கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு குழுவினர் சிறப்பு சோதனை மேற்கொண்டனர். அப்போது, கோவை ரயில் நிலையத்திற்கு தன்பாத் -ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இதையடுத்து நடைமேடையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவர் வைத்திருந்த வெள்ளை பையை சோதனையிட்டனர்.
அப்போது அதில் 16 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் ஆகும். இதையடுத்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், கைதான நபர் ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியைச் சேர்ந்த காளிந்தி ஸ்வைன் (35) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.