குற்றம்

கோவை சிறுமி கொலை வழக்கில் திருப்பம்: நகைக்காக தாயின் நண்பரே கொலை செய்தது அம்பலம்

நிவேதா ஜெகராஜா

கோவையில் முட்புதரில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுமி கொலை வழக்கில், சிறுமியை கொலை செய்ததாக அவரின் குடும்ப நண்பரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை சரவணம்பட்டி பகுதி யமுனா நகரில் நேற்று (டிச.16) கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் 14 வயது சிறுமியின் உடலானது கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், 13ம் தேதியன்று அந்த சிறுமி மாயமானதாக அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தது தெரியவந்தது. டிச்.11-ல் சிறுமி காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாய் கலைவாணி மற்றும் அவரது ஆண் நண்பர் முத்துக்குமாரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 3 ஆண்டுகளாக முத்துக்குமாரும் கலைவாணியும் நெருங்கி பழகி வந்ததாக சொல்லப்படும் நிலையில், முத்துக்குமாரிடமிருந்து இரண்டரை பவுன் தங்க நகையை கலைவாணி வாங்கியுள்ளார். அதனை சமீபத்தில் முத்துக்குமார் திருப்பித் தருமாறு கோரியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது மகளிடம் நகை இருப்பதாகவும், அவள் தர மறுப்பதால் தான் அவளிடம் பேசி வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து சம்பவத்தன்று சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்த முத்துக்குமார், அவரிடம் நகையை கேட்டு மிரட்டியதாகவும், மேற்கொண்டு சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலுக்காக முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமி அவரிடமிருந்து தப்பிக்க போராடியுள்ளார். ஆனால் சிறுமியை தப்பிக்கவிடாமல் இருக்க அவரின் கழுத்தை நெரித்து கொலை முத்துக்குமார் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் சிறுமியின் உடலை சாக்குமூட்டையில் கட்டி அருகிலிருந்த குட்டையில் வீசி விட்டுள்ளார். இவற்றை காவல்துறை விசாரணையில் முத்துக்குமாரே தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு காணாமல் போன சிறுமியை தேடுவது போலவும், தாய் கலைவாணி சிறுமியை காணவில்லை என புகார் அளிக்க உதவி செய்வது போலவும் முத்துக்குமார் நாடகமாடியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து முத்துக்குமார் மீது போக்சோ உட்பட 4 வழக்குகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றும், மருத்துவ அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.