தஞ்சையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கொல்லப்பட்ட சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
செந்தமிழ்நகரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகன் கிஷோரை கடந்த 23-ஆம் தேதியிலிருந்து காணவில்லை. பல இடங்களில் தேடிய உறவினர்கள் நேற்று காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்த கிஷோர், தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கழுத்தை நெரித்ததாகவும், அப்போது அவர் இறந்துவிட்டதாகவும் அரவிந்த் தெரிவித்தார்.
அதனையடுத்து, மாவட்ட எஸ்.பி செந்தில்குமார், வட்டாட்சியர் தங்கபிரபாகரன் முன்னிலையில் சிறுவனின் உடல் புதைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. சிறுவன் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.