வேலூர் அருகே சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம் அணைகட்டு அடுத்த முத்துக்குமரன்மலை கிராமத்தில் 8-வகுப்பு படிக்கக்கூடிய 13 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர் 33-வயதுடைய உறவினர் ஒருவரை கட்டாய திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதனிடையே சிறுமிக்கு நடக்கவிருந்த கட்டாயத் திருமணம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அணைகட்டு வட்டாட்சியர் குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் 8-ம் வகுப்பு படிக்கக்கூடிய 13 வயது சிறுமிக்கு 33 வயதுடையவருடன் இன்று காலை கீழ்கொத்தூர் கிராமத்தில் திருமணம் நடக்க இருப்பது தெரியவந்து. இதனையடுத்து சிறுமியின் பெற்றோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு நடக்க இருந்தத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நல மையத்தினர், சிறுமியை மீட்டு சமூக நலத்துறை அதிகாரிடத்தில் ஆஜர்படுத்தி பின்னர் ராணிப்பேட்டையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு 2 நாள் ஆலோசனைக்காக அனுப்பி வைத்தனர். உடன் சிறுமியின் பெற்றோரும் சென்றனர்.