சென்னையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஆதம்பாக்கம் மேட்டுகழனி பகுதியைச் சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது 4 வயது மகள் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அதனைக் கண்ட மேற்குவங்கத்தை சேர்ந்த இளைஞர் ஜாகிர் முண்டல் (வயது 24) சிறுமியிடம் பேசி அருகிலிருந்த மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கவே, சிறுமி கத்தியிருக்கிறார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்திருக்கின்றனர். அதனைக் கண்ட அந்த இளைஞர், அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சித்திருக்கிறார்.
ஆனால் பொதுமக்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஆதம்பாக்கம் போலீசார் ஜாகிர் முண்டலை கைது செய்தனர். அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேட்டுகழனி பகுதியில் வீடு ஒன்றில் கட்டட வேலை நடந்து வருகிறது. இங்குதான் அந்த இளைஞர் வேலை செய்துவந்தது தெரியவந்துள்ளது.