குற்றம்

‘திருமணமாகாத ஏக்கம்; ஆசையில் குழந்தையை கடத்திவிட்டோம்'- குழந்தையை கடத்தியவர் வாக்குமூலம்

நிவேதா ஜெகராஜா

சென்னையில் தொலைந்துபோன 'லாக்டவுன்' என்ற குழந்தையை, காவல்துறையினர் நேற்று பத்திரமாக மீட்டிருந்தனர். அந்தக் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட மூவர் இன்று கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, குழந்தைகள் மீது ஆசை இருந்ததால் குழந்தையை கடத்தியதாகவும், வடமாநில தொழிலாளியொருவர் உதவியுடன்தான் குழந்தை லாக்டவுனை கடத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரில், இருவருக்குத்தான் கடத்தலில் நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்ததால், அவர்கள் மட்டுமே தற்போது விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர்.

அம்பத்தூரில் காந்திநகர் பகுதியில் தாலுகா அலுவலகம் பின்புறம் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பொன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வேலை செய்து வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கிஷோர் - புத்தினி தம்பதி. இவர்களின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, `லாக்டவுன்'. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், குழந்தை லாக்டவுன் காணமல் போனது.

இதுகுறித்து குழந்தையின் தந்தை கிஷோர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த திங்கள் இரவு சுமார் 11 மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்தொன்றின் பின் இருக்கையில் குழந்தை லாக்டவுன் கண்டுபிடிக்கப்பட்டது. பெற்றோர், பாதுகாவலர் என யாருமின்றி 1.5 வயது குழந்தை பேருந்தில் இருப்பதை பார்த்த பேருந்தின் நடத்துநர்தான், குழந்தை குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்திருந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கோயம்பேடு போலீசார், இக்குழந்தை அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தை `லாக்டவுன்’-ஆக இருக்கலாம் என சந்தேகித்து அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமிக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து ராமசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் குழந்தையின் போட்டோவை வைத்துப் பார்த்ததில் தேடப்பட்டு வந்த குழந்தை லாக்டவுன் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார்.

இதன் பின்னர் அம்பத்தூர் போலீசார் குழந்தையின் தாய் தந்தையரை அழைத்துச் சென்று குழந்தையை அதிகாலை 01.00 மணிக்கு பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறை ஒரு இளைஞர் குழந்தையை தூக்கி செல்வதை கண்டு பிடித்தனர். மேலும் யார் அந்த நபர் என்பது குறித்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் குழந்தையை தூக்கி சென்றது கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த பாலமுருகன் என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமசாமி தலைமையிலான தனிப்படையினர், சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் இருந்த பாலமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், “நான் இந்த கட்டுமான இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறேன். என்னுடன் படித்த நண்பர்கள் அனைவருக்கும் திருமணமாகி, அவர்கள் குழந்தைகளுடன் சந்தோஷமாக உள்ளனர். எனக்கு திருமணமாகாத நிலையில் அவர்களை போன்று எனக்கும் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்க ஆசையாக இருந்தது. மேலும் எனக்கென்று ஒரு வாரிசு வேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் கிஷோர் - புத்தினி தம்பதியரின் குழந்தை லாக்டவுனை பார்த்தேன். அங்கு அவர்களுடன் பணிபுரியும் ஒரிசா மாநில தொழிலாளி சுஷாந்த் பிரதான் உதவியுடன் கடத்தி சென்றேன். மேலும் அக்குழந்தையை எனக்காக வளர்க்கும்படி எனக்கு தெரிந்த பெண்ணிடம் (மூன்றாவதாக கைது செய்யப்பட்ட நபர்) கேட்டேன். ஆனால் அவர்கள் அதை மறுத்துவிட்டார்கள். அதனால் குழந்தை லாக்டவுனை, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து விட்டு சென்றுவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து குழந்தை கடத்தலில் ஈடுபட இருவரையும் கைது செய்த காவல்துறை, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

குழந்தை லாக் டவுன் தூக்கி சென்றவர்களை விரைவாக செயல்பட்டு கைது செய்த காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஆவடி மாநகர காவல் ஆணையாளர், “ஒரு சவாலான காரியத்தை செய்து முடித்து உள்ளார்கள் காவல்துறையினர். குழந்தையை விற்கும் நோக்கத்தில் குழந்தை கடத்தவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

தொலைந்துபோன குழந்தையை பத்திரமாகவும் ,விரைவாக மீட்டுக்கொடுத்த தமிழக போலீசாருக்கு வடமாநில தம்பதி நெகிழ்ச்சியுடன் புதிய தலைமுறை வாயிலாக நன்றி தெரிவித்தனர்.