செய்தியாளர்: ஆர்.மோகன்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட டி.மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். கூலித் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் அபிதா என்ற பட்டதாரி மகளும் உள்ளனர்.
இந்நிலையில் அபிதாவிற்கு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆண் நண்பருடன் காதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு தந்தை அர்ஜுனன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தொடர்ந்து அந்த இளைஞருடன் அபிதா பேசி வந்ததாகக் கூறப்படுகிறது,
இதைத் தொடர்ந்து அபிதாவிற்கு பல்வேறு வரன்கள் பார்த்து வந்த நிலையில், அபிதா தொடர்ந்து திருமண வரன்களை புறக்கணித்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுனன், இன்று மகளுடன் மீண்டும் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அர்ஜுனன், மகள் என்றும் பாராமல் அபிதாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த புத்தூர் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட அபிதாவின் உடலை வீட்டு உடற்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே புத்தூர் காவல் நிலையத்தில் அர்ஜுனன் சரணடைந்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.