செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் மாடம்பாக்கம், மாருதி நகர் மெயின் ரோட்டில் கடந்த 14ம் தேதி, இரவு மூதாட்டி சொர்ணம் என்பவர் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 7½ சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார். இது குறித்து மூதாட்டி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, செயின் பறிப்பில் ஈடுபட்ட குரோம்பேட்டையைச் சேர்ந்த சண்முக ஆனந்தன் (32), என்பவரை சேலையூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் பட்டதாரி இளைஞர் என்பதும், தனியார் கிராபிக் டிசைனிங் நிறுவனத்தில் மாதம் 32 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
கிரெடிட் கார்டு, லோன் ஆப் மூலம் பெற்ற கடன் பிரச்னையால், யூடியூப் வீடியோ பார்த்து செயின் பறிக்க பயிற்சி எடுத்து ஒரு வாரத்திற்கு முன்பு இருசக்கர வாகனத்தை அம்பத்தூரில் திருடி, அந்த வாகனத்தில் வந்து செயிளை பறித்துச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.