செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
மெத் போதைப்பொருள் கடத்தல் கும்பல்:
கடந்த டிசம்பர் 21ம் தேதி ’மெத்’ போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எம்கேபி நகர், பர்மா நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.8 கிலோ மெத் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இவர்களை 8 நாட்கள் கஸ்டடி எடுத்து நடத்திய விசாரணையில், வெங்கடேசனின் மனைவி ஜான்சி மெரிடா, லாரன்ஸ், சரத்குமார், லட்சுமி நரசிம்மன், முருகன் உள்ளிட்ட 7 நபர்களை கைது செய்து ரூ.16 கோடி மதிப்புள்ள 16 கிலோ மெத் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப்பொருள் எங்கிருந்து எங்கு கடத்தப்படுகிறது? தனிப்படை போலீசார் தீவிர விசாரணை:
இதில் கைது செய்யப்பட்ட வெங்கடேசன் தான் போதைப்பொருள் கடத்தல் தொழிலுக்கு தலைவன் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் எங்கிருந்து எங்கு கடத்தப்படுகிறது? யார் மூலம் எப்படி கடத்தப்படுகிறது? என தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த விகாஷ் மைதீன் மற்றும் அவரது சகோதரர் விக்ரம் மைதீன் ஆகியோர் மூலமாக மெத்தபெட்டமைன் மற்றும் மெத் மூலப்பொருளான சூடோபெட்ரின் பொருட்களை மொத்தமாக வாங்கி அதனை ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மற்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சாகுல் ஹமீது ஆகியோர் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்துவது தெரியவந்தது.
விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்:
இந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த விகாஷ் மைதீன் மற்றும் சென்னை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (60) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். விகாஷ் மைதீன் மற்றும் அவரது சகோதரர் விக்ரம் மைதீன் ஆகியோர் பி.பார்ம் படித்துவிட்டு டெல்லி மற்றும் மணிப்பூர் மாநிலம் 'முர்ரே' பகுதியில் மெடிக்கல் நடத்தி வருவது தெரியவந்தது.
இந்த நிலையில், அண்ணன் - தம்பி இருவரும் பணத்திற்கு ஆசைப்பட்டு மணிப்பூர் மாநிலம் 'முர்ரே' பகுதியில் போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் பழக்கம் ஏற்படுத்தி, பின் போதைப் பொருட்கள் கடத்துவதை தங்களது வேலையாக வைத்துக் கொண்டதும் தெரியவந்தது.
அருப்புக்கோட்டையில் செயல்பட்ட கெமிக்கல் லேப்:
மேலும், இந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு விகாஷ் மைதீன், வெங்கடேசன் உள்ளிட்ட நபர்களுக்கு 10 ஆண்டுகள் நீதிமன்ற தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தவர்கள், அதன் பிறகு தலைமறைவாகியுள்ளனர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதேபோல அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த லட்சுமி நரசிம்மன் என்பவர் மலேசிய நாட்டில் பணிபுரிந்த போது அங்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி 2021 ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டதும் அதன் பிறகு வழக்கிலிருந்து விடுதலையாகி தமிழகம் வந்து அருப்புக்கோட்டையில் கெமிக்கல் லேப் தொடங்கியதும் பின், போதைப்பொருள் கடத்தல்க்காரர்களான வெங்கடேசன், சண்முகம் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
எலக்ட்ரிகல் பொருட்கள் ஏற்றுமதி பெயரில் போதைப் பொருள் கடத்தல்:
இவர்களோடு சென்னை பர்மா பஜாரில் எலக்ட்ரிகல் கடை வைத்து, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பாரிமுனை பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரும் இணைந்துள்ளார். இவர்கள் தங்களுக்குள்ளாக, பல்வேறு படிநிலை ஆட்களை பணிக்கு அமர்த்தி போதைப் பொருட்களை கடத்தி வந்துள்ளனர். மணிப்பூர் 'முர்ரே' பகுதியில் மெடிக்கல் நடத்தி வரும் விக்ரம் மைதீன் மருந்து பொருட்கள் எனக்கூறி மெத் போதைப் பொருளின் மூலப்பொருட்களான சூடோபெட்ரின் கெமிக்கலை தனது அண்ணன் விகாஷ் மைதீனுக்கு அனுப்பி வந்துள்ளார்.
டெல்லியில் மெடிக்கல் கடை நடத்தி வரும் விகாஷ் மைதீன் சூடோபெட்ரின் போதைப்பொருளை பிரித்து அதனை தமிழகத்தில் வெங்கடேசனுக்கு அனுப்பி வந்துள்ளார்.
லாரியில் கடத்திவரப்பட்ட சூடோபெட்ரின் கெமிக்கல்:
இதையடுத்து சென்னையிலிருந்து சண்முகம் மற்றும் அவரது ஆட்கள் டெல்லி சென்று அங்கிருந்து மருத்துவ பொருட்களுடன் சூடோபெட்ரின் கெமிக்கல் பொருளை லாரியில் கடத்தி வந்து அருப்புக்கோட்டை எடுத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அருப்புக்கோட்டையில் லட்சுமி நரசிம்மன் சூடோபெட்ரினை மெத் போதைப்பொருளாக மாற்றியவுடன், வெங்கடேசன் அருப்புக்கோட்டைக்குச் சென்று மெத் போதைப்பொருளை சென்னைக்கு கடத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இப்படி, சென்னைக்கு கடத்தி வரும் மெத் போதைப்பொருளை சாகுல் ஹமீது மூலமாக இலங்கை, தாய்லாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஹவாலா பணப் பரிவர்த்தனை மூலம் கைமாறும் போதைப் பொருள்:
குறிப்பாக ஹவாலா பணப் பரிவர்த்தனை மூலம் பல்வேறு நாடுகளுக்கு இடையே போதைப்பொருள் கைமாற்றப்படுவதும் போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட வெங்கடேசன், சண்முகம், ஷாகுல் ஹமீது ஆகியோர் வெளிநாடுகளுக்கு கடத்துவதுடன், சென்னை பெங்களுார் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு டீலர்ஷிப் மூலமாக மெத் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர். சென்னை, பெங்களுார் உள்ளிட்ட பெருநகரங்களில் சினிமா துறையினரை குறிவைத்தும், ஐ.டி ஊழியர்களை குறி வைத்தும் ரகசிய மொபைல் செயலிகள் மூலம் 'கோட் வேர்ட்' பகிரப்பட்டு விற்பனை செய்து வந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மணிப்பூரில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார்
இந்த நிலையில் மணிப்பூரில் தலைமறைவாக உள்ள விகாஷ் மைதின் தம்பி விக்ரம் மைதீனை பிடிப்பதற்கு தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டுள்ளனர். மேலும், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர். இந்த கடத்தல் கும்பலின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் யார்? டீலர்ஷிப் மூலமாக இவர்களிடம் மெத் போதைப்பொருள் வாங்கு சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் யார் யார்? ஐ.டி துறையைச் சேர்ந்தவர்கள் யார் யார் என மாதவரம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதுவரை, இந்த வழக்கில் மொத்தம் 11 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.18 கோடி மதிப்புள்ள 17.8 கிலோ மெத்தம்பெட்டைமன் போதைப்பொருள், சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.