செய்தியாளர்: ஆனந்தன்
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியின் காவலாளியாக இருப்பவர் ரங்கநாதன். இவர், நேற்று முன்தினம் வழக்கம் போல் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர் ஏடிஎம் வாசலில் பைக்கை நிறுத்தி உள்ளனர். அப்போது காவலாளி ரங்கநாதன், இங்கு பைக்கை நிறுத்தக் கூடாது என்று கூறியுள்ளார். நான் இங்குதான் நிறுத்துவேன் உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்று கூறிவிட்டு அந்த நபர்கள் ஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது காவலாளி ரங்கநாதன், பைக்கை பார்க்கிங்கில் நிறுத்துவதற்கு தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த பைக்கின் உரிமையாளர்கள் காவலாளி ரங்கநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கொலைவெறித் தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ரங்கநாதன் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் அந்த நபர்களை கைது செய்து தற்போது காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.