குற்றம்

சென்னை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

சென்னை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

kaleelrahman

சென்னையில் சிறுமிக்கு 9 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரில் சிறுமியின் தாய், அவரது உறவினர் மற்றும் காப்பகத்தைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை பெரவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காப்பக நிர்வாகி கைது செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது நீதிபதி, பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவருடன் இருந்த மற்றொரு 22 வயதான பெண்ணிடமும் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது அந்த பெண் தமக்கு 9 வயதில் இருந்து இது போன்ற தொந்தரவுகள் நடந்து கொண்டிருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்த குழந்தைகள் நல பாதுகாப்பு துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி லலிதா அந்த பெண்ணிடம் விசாரணை செய்து இது தொடர்பாக ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், “சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவர் தமது ஒரு வயது மகளை உறவினரிடம் வளர்ப்பு குழந்தையாக ஒப்படைத்திருக்கிறார். அவருடைய 9 வயதில் இருந்தே அவருடைய உறவினர்கள் பாலியல் தொந்தரவு அளித்திருக்கின்றனர். இதனால் கடந்த 2020 ஆம் ஆண்டு மனஉளைச்சல் ஏற்பட்டு வீட்டிலிருந்து வெளியேறி பிராட்வே மண்ணடி பகுதியில் சுற்றித் திரிந்தவர் குறித்து, அப்பகுதி மக்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அந்த பெண்ணை மீட்ட அதிகாரிகள் பெரவள்ளூரில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

அப்போது, தமக்கு நடந்த அனைத்து பாலியல் தொல்லைகள் குறித்தும் காப்பக நிர்வாகி இசபெல்லாவிடம் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தான் காப்பகத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காப்பக நிர்வாகியின் உறவினர் கைது செய்யப்பட்டு அந்த வழக்கில் இந்தப் பெண்ணும் பாதிக்கப்பட்டவராக நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு சென்றதாகவும், 9 வயது முதல் பாலியல் தொந்தரவு அளித்த நபர்கள் குறித்து காப்பக நிர்வாகியிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட ராயபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர், சம்பவம் தொடர்பாக தாய் சாந்தி, அத்தை ரேவதி மற்றும் காப்பக நிர்வாகி இசபெல்லா ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண்ணின் தாய்மாமன் தேசப்பன், அவரது நண்பர்கள் ரமேஷ், சீனிவாசன், சிவா ஆகிய 4 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.