குற்றம்

சென்னை: கூலித் தொழிலாளியால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

சென்னை: கூலித் தொழிலாளியால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

kaleelrahman

திருநின்றவூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர், கிருஷ்ணாபுரம், முதல் தெருவில் புதிதாக கட்டப்படும் வீட்டில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து. இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், மர்மமான முறையில் இறந்து கிடந்த அந்தப் பெண் திருநின்றவூர், நத்தம்பேடு, அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் அழகேசன் என்பவரது மனைவி பாக்கியலட்சுமி (55) என்பது தெரியவந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட இவர், தினமும் வீட்டை விட்டு வெளியே சென்று சுற்றி விட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 30 ஆம் தேதி இரவு முதல் பாக்கியலட்சுமி வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இதற்கிடையில், பாக்கியலட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அவரது இறப்பில் போலீசாருக்கு சந்தேகமும் ஏற்பட்டதை அடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அப்போது, பாக்கிய லட்சுமியை திருநின்றவூர், நடுக்குத்தகை, பாடசாலை தெருவைச் சேர்ந்த சக்திவேல் (32) என்ற குப்பை பொறுக்கும் கூலித்தொழிலாளி இழுத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து,போலீசார் நத்தம்பேடு பகுதியில் தலைமறைவாக இருந்த சக்திவேலை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், பட்டப்பகலில் பாக்கியலட்சுமியை புதிய கட்டடத்திற்கு இழுத்துச் சென்ற சக்திவேல், அவரை வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரை கொலை செய்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சக்திவேலை கைது செய்த போலீசார் வேறு ஏதேனும் குற்ற செயலில் ஈடுப்பட்டுள்ளாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.