குற்றம்

சென்னை: ‘எங்களை காப்பாத்துங்க என போன் செய்த மூதாட்டி' – சாதுர்யமாக மீட்ட போலீசார்

kaleelrahman

கோடம்பாக்கத்தில் தாயையும், பேரக்குழந்தையையும் அறையில் வைத்து பூட்டி கொடுமைப்படுத்திய மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை கோடம்பாக்கம் கோவிந்தராஜன் தெருவில் வசித்து வருபவர் அமலா (60). இவர் காவல் கட்டுப்பாட்டறையை தொடர்பு கொண்டு தனது மகன் தன்னை அறையில் பூட்டி வைத்து கொடுமைப்படுத்துவதாக தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து கோடம்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் பெருமாள் மற்றும் காவலர் செல்வகணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கு சதீஷ் குமார் என்பவர் அவரது தாய் அமலாவை தாக்கியதோடு அமலாவையும், சதிஷ்குமாருடைய தங்கையின் கைக்குழந்தையையும் வீட்டின் அறையில் பூட்டி வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து வீட்டின் மாடியில் இருந்த சதீஷை போலீசார் விசாரிக்கச் சென்றனர். அப்போது சதீஷ் பூட்டியிருந்த அறையை திறக்கமாட்டேன் எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து தலைமை காவலர் பெருமாளை கன்னத்தில் அறைந்து, கையால் தாக்கி, சீருடையை கிழித்து, தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அறைக்குள் பூட்டி வைத்திருந்த வயதான பெண்மணியான அமலா மற்றும் கைக்குழந்தையை மீட்ட போலீசார், இந்த சம்பவம் குறித்து அமலா கொடுத்த புகார் மற்றும் தலைமைக் காவலர் பெருமாள் கொடுத்த புகார் என 2 புகார்களின் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சாதுர்யமாக செயல்பட்டு வயதான பெண்ணையும், குழந்தையையும் மீட்ட கோடம்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் பெருமாள், காவலர் செல்வகணேஷ் ஆகியோரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.