குற்றம்

சென்னை: காவலர் குடியிருப்பில் தொடர் திருட்டு - எஸ்ஐ மகன் உட்பட இருவர் கைது

webteam

புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் உள்ள 5 வீடுகளில் 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆய்வாளரின் மகன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புதுப்பேட்டையில் தமிழ்நாடு ஆயுதப்படை காவலர்களுக்கான புதிய குடியிருப்பு உள்ளது. கடந்த 21 ஆம் தேதி காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட நபர் 5 வீடுகளில் 25 பவுன் வரை தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் பேரில் சென்னை எழும்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அதே குடியிருப்பு பகுதியில் வசிக்கும் காவல் உதவி ஆய்வாளரின் மகன் ஒருவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது

.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உதவி ஆய்வாளரின் மகன் நண்டு (எ) நந்தகோபால் மற்றும் அருண் (19) என்பவருடன் இணைந்து இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. மேலும் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் காரணத்தால், பெரும்பாலான குடியிருப்புகளின் கதவுகளை பூட்டாமல் சாத்தி மட்டுமே வைப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதை பயன்படுத்தி நந்தகோபால் மற்றும் அருண் ஆகிய இருவரும் 5 வீடுகளில் நுழைந்து 25 பவுன் தங்க நகைகள், 35 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மூன்று செல்போன்கள் கொள்ளை அடித்ததும் தெரியவந்தது. கல்லூரி படிக்கும் நந்தகோபால் போதை பழக்கத்திற்கு அடிமையாகி செலவுக்கு பணம் இல்லாததால வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நந்தகோபால் மற்றும் அவரது நண்பன் அருண் ஆகிய இருவரையும் சென்னை எழும்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து கொள்ளை போன 25 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.