குற்றம்

சென்னை: பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை; கார் ஓட்டுநர் போக்சோவில் கைது

kaleelrahman

பள்ளி மாணவிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்திச் சென்ற கார் ஓட்டுநரை, வில்லிவாக்கம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை கொளத்தூர் கண்ணகி நகரைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்யும் 47 வயது நபருக்கு இரண்டு மகள்களும், மகனும் உள்ளனர். இந்நிலையில், இவரது கடைசி மகளான பிளஸ் 2 மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து புகாரின் போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் குமார் (26) என்பவர் அந்த மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி கடத்திச் சென்று, திருமணம் செய்ததாக தெரியவந்தது.

இதையறிந்த அந்த மாணவியின் தந்தை வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இந்த வழக்கு வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், மகளிர் போலீசார் மாணவியையும் குமாரையும் தேடிவந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவி வீட்டிற்கு வந்தார்.  இதைத்தொடர்ந்து மாணவியிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அரக்கோணம் அருயே தலைமறைவாக இருந்த குமாரை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இதையடுத்து மாணவிக்கு ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக குமார் மீது வில்லிவாக்கம் அனைத்து மககளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.