குற்றம்

'வேலியே பயிரை மேய்ந்தது' சென்னையில் ரூ.4.42 கோடி பணம் மோசடி

'வேலியே பயிரை மேய்ந்தது' சென்னையில் ரூ.4.42 கோடி பணம் மோசடி

kaleelrahman

பிரபல செக்யூரிட்டி நிறுவனத்தில் ரூ 4.42 கோடி மோசடி செய்த மேலாளரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரபல Bulldyers Integrated Solutions Pvt., Ltd,  என்ற செக்யூரிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீநாதரெட்டி, தனது சகோதரி மகன் ஸ்ரவன்குமார் என்பவரை நம்பிக்கையின் பேரில் கடந்த 2017 ஆம் ஆண்டு மேலாளராக பணியமர்த்தினார்.

இந்நிலையில் ஸ்ரீநாதரெட்டி பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் நிறுவனத்தின் மொத்த பொறுப்புகளையும் ஸ்ரவன்குமார் கவனித்து வந்தார். இதையடுத்து கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, கடந்த 2020-2021 வரை ஸ்ரவன்குமார் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வந்தார். பொது முடக்கம் முடிந்த பின்னரும் ஸ்ரவன்குமார் பணிக்கு வராமல் இருந்தார்.

இதனால் சந்தேகமடைந்த ஸ்ரீநாதரெட்டி தனது கணக்காளர்கள் மூலம் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தார். அதில் கடந்த 01.01.2018 முதல் 11.05.2021 வரையிலான காலகட்டத்தில் ஸ்ரவன்குமார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிறுவனம் அரசுக்கு கட்ட வேண்டிய ஜிஎஸ்டி, வருமான வரி பணத்தை நிறுவனத்தின் கணக்கில் கட்டியது போல போலியான ஆவணங்கள் தயார் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் நிறுவனத்தின் ரூ.4,42,14,312 பணத்தை ஸ்ரவன்குமார் தனது சொந்த வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்து மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக ஸ்ரீநாதரெட்டி சென்னை மத்திய குற்றப்பிரிவில், ஆவண மோசடி தடுப்பு பிரிவில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஸ்ரவன்குமார் இருப்பிடம் பற்றி கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்கனூர், தாட்டிமாகுள்ளபாளையத்தில் இருந்த ஸ்ரவன்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் ஸ்ரவன்குமார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.