தாம்பரம் தனியார் நிறுவனத்தில், 2.25 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி உட்பட நான்கு பேரை, தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள குரோம்பேட்டையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர், 2.25 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக, நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி விஜயகுமார் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்தாண்டு நவம்பர் 19ம் தேதி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்த கோவையைச் சேர்ந்த சந்தானகுமார், கணக்கு மேலாளர் பிரவீனா அவரது கணவர் சேகர், காசாளர் கார்த்திக் ஆகிய நான்கு பேர், மோசடியில் ஈடுபட்டு, தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தாம்பரம் காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்ட பின், வழக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. அதில், தலைமறைவாக இருந்த நான்கு பேரையும் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.