குற்றம்

‘திருந்தி வாழ்ந்தது குத்தமா?’ முட்டை கோபியின் (ரவுடி) கொலைக் கதை!

‘திருந்தி வாழ்ந்தது குத்தமா?’ முட்டை கோபியின் (ரவுடி) கொலைக் கதை!

webteam

சென்னையில் ரவுடியாக வலம் வந்து திருந்தி வாழ்ந்த முட்டை கோபி கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
சென்னை கொடுங்கையூர் பகுதியில் முட்டை கோபி என்றாலே ஒரு பயம் வரும் அளவிற்கு ரவுடியாக திகழ்ந்தவர் கோபி. இவர்மீது காவல் நிலையங்களில் ஏறத்தாழ 50 வழக்குகள் உள்ளன. அதில் பெரும்பாலானவை அடிதடி வழக்குகள் தான். தொடக்கத்தில் ஆட்டோ ஓட்டுவது போன்ற சிறு தொழில்களை தான் செய்து வந்துள்ளார் கோபி. அவ்வப்போது ஏரியாவுக்குள் ஏற்படும் சிறு சிறு சண்டைகளில் தலையிட்டு, அடிதடிகளில் ஈடுபடத்தொடங்கினார். 

சண்டை போட்டால், அடிபட்டவங்க சும்மா விடுவாங்களா? நண்பர்களுடன் வந்து கோபியை அடித்து நொறுக்க முடிவு செய்துள்ளனர். இவ்வாறு கோபியின் சண்டை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. நாட்கள் நடைபோட, சண்டைகளும் வழக்குகளும் அதிகரிக்க ஏரியாவில் கோபி என்றால் அடிதடிக்காரன் என்ற அளவிற்கு பேசப்பட்டுள்ளார். பின்னர் ரவுடிகளுடனான நட்பு வட்டாரத்தை பெருக்கிக்கொண்ட கோபி, கொடுங்கையூரின் ‘முட்டை கோபி’ என்று காவல்நிலையத்தில் கூறினால் தெரியும் அளவிற்கு ரவுடியாக மாறியுள்ளார்.

அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, ஆட்கடத்தல், கொலை என ரவுடி தனத்தையே பின்னர் தொழிலாக செய்து வந்துள்ளார். கோபியின் கூட்டாளிகள் குற்றம் செய்துவிட்டால் வழக்கமான ரவுடிகளைப் போல தலைமறைவாகிவிடமால், நேராக நீதிமன்றத்திற்கு சென்று ஆஜராகும் தன்மையை கொண்டவர்களாக இருந்துள்ளனர். இதன்படி பார்த்தால் முட்டை கோபி, பிரபல வக்கீல்களை வைத்து தனது ஆட்களை வெளியே எடுக்கும் அளவிற்கு செல்வாக்குடன் திகழ்ந்துள்ளார் என்பது தெரிகிறது. 

கோபியின் மீது ஆத்திரத்தில் இருந்த எதிரிகள் அவருக்கு பயம் காட்ட அவரது தந்தையை தாக்கியுள்ளனர். ஆனால் கோபி பயம் கொள்ளமால், தனது தந்தையை தாக்கியவர்களை நடுரோட்டில் விரட்டி அடித்துள்ளார். இவ்வாறு ரவுடி வாழ்வையே முழுக்க முழுக்க வாழ்ந்து வந்த முட்டை கோபி, ஒரு கட்டத்தில் இந்த வாழ்வு நிம்மதியற்றது என்பதை உணர்ந்துள்ளார். பிறர் போன்ற ஒரு நிம்மதியான சாமாண்ய வாழ்வை வாழ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. 

தனது மாற்றம் தொடர்பாக காவல் ஆணையருக்கும், சிறைத்துறை அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதிவிட்டு, ஆட்டோ டிரைவராக புதிய வாழ்வை தொடங்கியுள்ளார் கோபி. இதுதான் தகுந்த நேரம், இப்போது கோபியை தீர்த்துக்கட்டி விடலாம் என்று நினைத்த அவரின் எதிரிகள் கோபிக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளனர். இடம், நேரம் என பலமான திட்டத்தையும் தீட்டியுள்ளனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் காமராஜ் சாலையில் உள்ள கடையில், தேனீர் குடித்துக் கொண்டிருந்தார் கோபி. அப்போது 6 பேர் கொண்ட கும்பல், கோபியை நோக்கி வருவதைப் பார்த்த அவர், அங்கிருந்து ஓடத் தொடங்கினார். அப்போது விரட்டிச் சென்ற கும்பல், கோபியை வெட்டிக் கொன்றது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்துள்ள கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் கோபி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை கைதும் செய்துள்ளனர்.

ஒரு ரவுடியாக வாழ்ந்து வந்த கோபி திருந்தி வாழ்ந்த நேரத்தில் இவ்வாறு கொலை செய்யப்பட்டது, திருந்தும் எண்ணம் கொண்ட ரவுடிகளுக்கு மாற்று எண்ணத்தை கொடுக்கும் வகையில் அமையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அத்துடன் திருந்தி வாழ நினைப்பவர்கள் சொந்த ஊரிலே வாழ்ந்தால் இது தான் நிலையோ? என்று கேள்வியையும் எழுப்புகின்றது.