சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சஜித் என்பவர் கடந்த மாதம் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 17.75 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்திருந்தார். அதேபோல சித்ரா என்பவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 4.58 லட்சம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ரூ.17.75 லட்சம் மோசடி வழக்கில், ரூ.10.75 லட்சம் பணமும், ரூ.4.58 லட்சம் மோசடி வழக்கில் ரூ.3 லட்சம் பணமும் ஒரே வங்கி கணக்கிற்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், விக்கிரவாண்டி அடுத்த வெள்ளையம்பட்டு பகுதியைச் சேர்ந்த கலையரசன் என்பவருடைய வங்கிக் கணக்கு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஓராண்டுக்கு முன்பாக டீக்கடையில் பழக்கமான ஒரு நபர் வங்கியில் லோன் எடுத்துத் தருவதாகவும், மேற்கொண்டு பணம் தருவதாகவும் கூறியதால் வங்கிக் கணக்கை தனது பெயரில் ஓப்பன் செய்து கொடுத்ததாகவும், தற்போது நடந்த மோசடிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து தனது வங்கிக் கணக்கை மோசடிக்காக Money Mule ஆக செயல்பட்டு பிறருக்கு விற்பனை செய்த காரணத்தினால் கலையரசனை கைது செய்த கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும், கலையரசனை Money Mule-ஆக வைத்து வங்கிக் கணக்கை வாங்கி ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்திய நபர் குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.