குற்றம்

“நான் டிஎஸ்பி, என்னையே விசாரிப்பீங்களா?” - நில அபகரிப்புக்காக வேடமிட்ட தலைமைக்காவலர்

“நான் டிஎஸ்பி, என்னையே விசாரிப்பீங்களா?” - நில அபகரிப்புக்காக வேடமிட்ட தலைமைக்காவலர்

kaleelrahman

ரூ. 4 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க மூதாட்டி தொழிலதிபரை கைது செய்வதுபோல் நடித்து குடிபோதையில் தகராறு செய்த தலைமை காவலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை அண்ணாநகர் 6வது அவன்யூவை சேர்ந்தவர் ஸ்ரீதேவி உன்னிதன் (84). இவர் பிரபல ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் நிறுவனமான சங்கர் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர். இந்நிலையில் நேற்று மதியம் இவரது வீட்டுக்கு காவலர் உடையில் வந்த ஒருவர், தன்னை குற்றப்பிரிவு டி.எஸ்.பி எனவும், தன்னுடன் வந்த மற்ற இருவரை க்ரைம் பிராஞ்ச் போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர், ஸ்ரீதேவி உன்னிதனை கைது செய்து அழைத்துச் செல்ல வேண்டும் என அந்த நபர் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஸ்ரீதேவி உன்னிதனின் பேரன் சைலேஷ் என்பவர் வந்து விசாரித்துள்ளார். அப்போது போலீஸ் உடையில் இருந்தவர் போதையில் இருந்தது தெரியவந்தது. போலீஸ் உடையும் சரிவர இல்லாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்து சைலேஷ், கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குபின் முரணான பதில் தெரிவித்துள்ளார். அடையாள அட்டையை கேட்டபோது போலீஸ் உடையில் வந்த நபரும், உடன் வந்தவர்களும் தப்பியோடியுள்ளனர். ஆனால் சைஷேசும் பொதுமக்களும் அவர்களை துரத்திப் பிடித்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் 'தான் சைபர் க்ரைம் டிஎஸ்பி எனவும், வழக்கு ஒன்றிற்காக ஸ்ரீதேவி உன்னிதனை கைது செய்ய வந்திருப்பதாகவும், ஒரு உயர் அதிகாரியான தன்னிடம் நீங்கள் விசாரணை நடத்துவதா?' எனக்கூறி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பிரச்னை செய்துள்ளார். இதனால் மிரண்டு போன அண்ணாநகர் காவல் துறையினர் பிரச்னை நடந்த பகுதி திருமங்கலம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் காவலர் உடையில் வந்த அந்த நபரை திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருமங்கலம் காவல் நிலையத்திலும் டி.எஸ்.பி.யான தன்னிடம் பதவி குறைவான நீங்கள் விசாரணை நடத்த முடியாது எனக் கூறி பிரச்னை செய்தார். சில மணி நேரத்திற்கு பிறகு திருமங்கலம் போலீசார் விசாரணையில் தன்னை டி.எஸ்.பி எனக் கூறி வந்த அந்த நபர் யானைக்கவுனி காவல்நிலைய தலைமை காவலர் டேவிட் ஆனந்தராஜ் (54) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து பணிக்குச் செல்லாமல் ஒழுங்கீனமாக நடந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீதேவி உன்னிதன் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக மேல் அயனம்பாக்கத்தில் நான்கு கிரவுண்ட் இடம் வாங்கியுள்ளார். அதன் அருகே உள்ள நிலத்தில் தனக்கு உரிமை இருப்பதாக தலைமை காவலர் டேவிட் ஆனந்தராஜ் பிரச்னை செய்து வந்தது தெரியவந்தது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஸ்ரீதேவி உன்னிதனின் நிலம் தனக்கு சொந்தமான நிலம் என கூறி அவர்களிடம் தலைமை காவலர் டேவிட் ஆனந்தராஜ் பிரச்னை செய்து வந்துள்ளதும் ஸ்ரீதேவி உன்னிதனின் நிலத்திலுள்ள சுற்றுச் சுவர்களை தலைமை காவலர் டேவிட் ஆனந்தராஜ் சேதப்படுத்தியதும் தெரியவந்தது.

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீதேவி உன்னிதன் நிலத்தின் காவலாளியை தலைமை காவலர் டேவிட் ஆனந்தராஜ் கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்தார். இதனால் திருவேற்காடு காவல் துறையினரால் அப்போதே வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலைமை காவலர் டேவிட் ஆனந்தராஜ் சிறைக்கு சென்று வந்தார். சிறையிலிருந்து வெளியே வந்த தலைமை காவலர் டேவிட் ஆனந்தராஜ் தொடர்ச்சியாக ஸ்ரீதேவி உன்னிதனின் நிலத்தில் மதுபான பாட்டில்களை உடைத்து பிரச்னை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் அண்ணாநகரில் உள்ள ஸ்ரீதேவி உன்னிதனின் வீட்டுக்கு நேற்று இரண்டு நபர்களுடன் வந்த டேவிட் ஆனந்தராஜ், தான் கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி எனவும் தன்னுடன் வந்தவர்கள மஃப்டியில் வந்த காவலர்கள் எனவும் கூறி ஸ்ரீதேவி உன்னிதனை கைது செய்ய முற்பட்டு பிரச்னை செய்துள்ளார். இதனையடுத்து டேவிட் ஆனந்தராஜ் மீது திருமங்கலம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் 294(பி)- ஆபாசமாக திட்டுதல், 448- அத்துமீறி வீட்டிற்குள் நுழைதல், 506(1)- கொலை மிரட்டல், 170- அரசு ஊழியர் போல நடித்து ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறைக்கு அனுப்பினார்.