குற்றம்

சென்னை: தண்ணீரில் கலந்து ஊசி மூலம் போதைபொருள் விற்பனை... பின்னணியில் நைஜீரிய இளைஞர்

kaleelrahman

சென்னையில் போதை பொருள் விற்றதாக நைஜீரிய இளைஞர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மற்றும் புறநகரில் மெத்தபெட்டமைன் வகையை சேர்ந்த, போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் கண்காணித்தனர். அப்போது கத்திப்பாரா அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விஜய் (27), ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சீராளபதி (26), திருச்சியைச் சேர்ந்த நந்தகுமார் (26) ஆகியோரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், நந்தகுமார் ஆலந்தூரில் தங்கியிருந்து கேட்டரிங் வேலையும் சீராளபதி தனியார் மருந்தகம் ஒன்றிலும் விஜய் தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வருவது தெரியவந்தது.. இவர்கள் பெங்களூருவில் இருந்து கிறிஸ்டல் போதை பொருளை கடத்தி வந்து தண்ணீரில் கலந்து ஊசி முலம் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கன்னியாகுமரியைச் சேர்ந்த அருண்பாண்டியன் (27), என்பவரை பிடித்த போலீசார், இவர்களுக்கு போதை பொருளை சப்ளை செய்ததாக பெங்களூருவில் இருந்த நபரை சென்னைக்கு வரவழைத்து பிடித்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில் இவர், நைஜீரியாவைச் சேர்ந்த அகஸ்டின் (29) என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 100 கிராம் போதை பொருள், ரூ.51 ஆயிரம் பணம், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.