காணமல் போன சென்னை பொறியாளர் ஹரிசுதன் பின்லாந்து கடற்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஜார்ஜ் டவுனை சேர்ந்தவர் பொறியாளர் ஹரிசுதன். வயது 26. இவர் பின்லாந்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதாக இந்திய தூதரகம் அதிகார பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில பின்லாந்தில் உள்ள ஹெர்னெசாரி என்னும் கடற்கரையில் வியாழனன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அவரது உடல் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்டபூர்வமான நடவடிக்கைகள் முடிந்த பின்பு சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று இறுதியாக ஹரிசுதன் அவரது தாயாரை மொபைலில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். 2 வாரங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் வெளியில் சென்ற ஹரிசுதன் வீடு திரும்பவில்லை. அதன் பின்பு அவருடைய மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பின்லாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஹரிசுதனின் செல்போன் சிக்னலை வைத்து சடலத்தை மீட்டுள்ளதாகவும், எப்படி இறந்தார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் வெளிநாட்டு இந்திய வாழ் மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.