குற்றம்

"நான் பாஜக... பில்லுக்கு பணமா?!' - சிக்கன் ரைஸுக்காக கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

"நான் பாஜக... பில்லுக்கு பணமா?!' - சிக்கன் ரைஸுக்காக கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

kaleelrahman

சென்னை ராயப்பேட்டை உணவகத்தில் சாப்பிட்ட சிக்கன் ரைஸுக்கு பணம் கேட்டவருக்கு மதுபோதையில் கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்தையா தெருவில் சையது அபுபக்கர் என்பவர் உணவகம் நடத்திவருகிறார். அதே பகுதியை சேர்ந்த மூன்று பேர் இவரது கடைக்கு இரவு சாப்பிடுவதற்காக வந்திருக்கிறார்கள். இரவு நீண்ட நேரமாகிவிட்டதால் அபுபக்கர் கடையை மூடிவிட்டார்.

இந்நிலையில், போதையில் வந்த மூன்று பேரும் தங்களுக்கு சிக்கன் ரைஸ் வேண்டுமென்று மிரட்டியிருக்கிறார்கள். அதன்பிறகு மூன்று சிக்கன் ரைஸ் பார்சல் செய்து கொடுத்துவிட்டு 180 ரூபாய் பணம் கேட்டிருக்கிறார். அதற்கு போதையில் இருந்த ஒருவர் ’நாங்கள் பணத்தை தர முடியாது. நான் பாஜகவில் பகுதி செயலாளராக இருக்கிறேன். என்னிடமே பணம் கேட்கிறாயா?’ என்று கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். ’அமித் ஷாவின் உதவியாளருக்கு போன் செய்தால் உடனடியாக ஆயிரம் பேர் இங்கு வந்து கலவரம் செய்வார்கள்’ என்று கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்திற்கு சையது அபுபக்கர் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு வந்த ரோந்து போலீசார் போதையில் இருந்த மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில், திருவல்லிக்கேணி பாஜக மேற்குத் தொகுதி செயலாளர் பாஸ்கர், தொகுதி செயலாளர் புருஷோத்தமன் மற்றும் சூர்யா ஆகிய மூன்று பேர் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஸ்கர் மற்றும் புருஷோத்தமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.