gold
gold புதிய தலைமுறை
குற்றம்

கணநொடியில் நகையை மாற்றிய பெண்.. நூதன முறையில் மோசடி.. போலீஸ் வலைவீச்சு

யுவபுருஷ்

சென்னை முகப்பேர் பகுதியில் மகாலட்சுமி ஜுவல்லரி என்ற நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி நகைக்கடைக்கு வந்த ஒரு தம்பதி, 9 சவரன் நகைகளை அடமானம் வைத்து 3 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர்.

மேலும் அடமானம் வைக்கும் பணத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு புது நகைகள் எடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட கடை உரிமையாளர், அடமானம் வைப்பதற்காக எடுத்து வந்த நகைகளை சோதனை செய்து விட்டு, அதற்கான பணத்தை கணக்கீடு செய்துள்ளார்.

பின்னர் அவர்கள் கேட்டது போலவே புதிய நகைகளையும் காட்டியுள்ளார். 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கு புதிய நகைகளையும், மீதம் அடமான தொகையில் 98 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன்பாக கடையில் உள்ள நகைகளை வங்கியில் அடமானம் வைப்பதற்காக சென்றபோது, அந்த 9 சவரன் நகைகளும் போலி நகைகள் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியுற்ற அவர் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்துள்ளார். அப்போது அந்த தம்பதிக்கு கடைக்காரர் புதிய நகைகளை காட்டி கொண்டிருக்கும்போது, அடமானம் வைக்க கொண்டுவந்த தங்க நகைகளுக்கு பதிலாக, தம்பதியர் அதேபோன்ற வேறு நகைகளை நொடிப்பொழுதில் மாற்றி வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதனை பார்த்த கடை உரிமையாளர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, நொளம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகைகளை அடமானம் வைத்து மோசடியில் ஈடுப்பட்ட தம்பதியினரை தேடி வருகின்றனர்.