செய்தியாளர்: ஆனந்தன்
வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் யாரேனும் பணியின் போது உயிரிழந்துவிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் NRI வங்கி கணக்கு செயல்படுகிறது. சென்னை மாவட்ட ஆட்சியரின் வங்கி கணக்கிலிருந்து NRI உதவி தொகை பெறும் பயனாளி போன்று போலி ஆவணங்களை தயாரித்து 11.63 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று முறைக்கேடு நடந்துள்ளதாக துணை ஆட்சியர் ஹர்ஷத் பேகம் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணையில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் NRI உதவித் தொகை பெரும் பயனாளி போன்று, நடிக்க வைத்து, அவர் மூலம் பணத்தை முறைகேடு செய்ததும் அரசு ஊழியர்களான சுப்பிரமணி மற்றும் பிரமோத் ஆகியோர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வருவாய் ஆய்வாளர்களாக பணிபுரிந்து வரும் இருவரும் இந்த முறைக்கேட்டிற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.