செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
பிரதீப் குமார் என்பவர் சமீபத்தில் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர், அதிமுகவில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரசாத் என்பவரின் நண்பர் ஆவார். முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவரோடு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பப்பில் பழக்கமாகி அவருக்கு, பிரதீப் குமார் கொக்கைன் விற்பனை செய்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரதீப் குமார், பெங்களூரில் வசித்து வரும் நைஜீரியாவைச் சேர்ந்த ஜீரிக் என்பவர் ஏற்பாட்டில் கானாவை சேர்ந்த ஜான் என்பவரிடமிருந்து கொக்கைன் போதைப் பொருளை வாங்கி சென்னையில் விற்பனை செய்து வந்துள்ளார். இதையடுத்து சேலம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப் குமார் (38), மற்றும் மேற்கு ஆப்ரிக்கா கானா நாட்டைச் சேர்ந்த ஜான் (38) ஆகிய இருவரையும் கைது செய்துள்ள ஆயிரம் விளக்கு போலீசார், அவர்களிடம் இருந்து 11 கிராம் கொக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தலைமறைவாக உள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஜீரிக் உள்ளிட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.