செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை கொரட்டூர் செந்தில் நகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் திவ்யா. இவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது தந்தை பாலசுந்தரம் (73) என்பவர் தேவி நகரில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், இரவில் கருப்பு நிற பர்தா அணிந்தபடி வந்த நபர் ஒருவர் மிளகாய் பொடியை தூவி, இரும்பு கம்பியால் தனது தந்தையை தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக புகார் அளித்திருந்தார்.
இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து பர்தா அணிந்து வீட்டில் புகுந்து நகையை பறித்துச் சென்றது யார் என தேடிவந்தனர். இதையடுத்து மீண்டும் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் சம்பவம் நடந்த இடத்துக்கு மீண்டும் வரும் காட்சியும் பதிவாகி இருந்தது. இதையடுத்து சந்தேகத்தில் அடிப்படையில், பாலசுந்தரத்தின் வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்குச் சென்ற போலீசார், அங்கிருந்த இளம் பெண்ணிடம் விசாரித்தனர்.
விசாரணையில், அந்த மளிகை கடையை நடத்துபவரின் மகள் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து பட்டதாரி பெண் செயின் பறிப்பில் ஈடுபட காரணம் குறித்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பட்டதாரியான அந்தப் பெண் ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து வெளியேறி, பெற்றோர் நடத்தி வரும் மளிகை கடையை கவனித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு ஆன்லைன் பெட்டிங் செயலியில் பணத்தை போட்டுள்ளார்.
முதலில் குறைந்த அளவு பணத்தை போட்டபோது, அதிகளவு பணம் கிடைத்ததாகவும், மளிகை கடையில் எடுத்த பணத்தை திருப்பி வைத்து விடலாம் என நினைத்தபோது ஆன்லைன் பெட்டிங் செயலியில் போட்ட பணம் அனைத்தையும் இழந்ததாக தெரிவித்துள்ளார். மளிகை கடை பணத்தை தந்தை கேட்டால் என்ன செய்யலாம் என யோசித்த அவர், மளிகை கடைக்கு பர்தா அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணை பார்த்து அதேபோல் பர்தா அணிந்து செயின் பறிப்பில் ஈடுபட்டால் கண்டுபிடிக்க முடியாது என திட்டமிட்டு செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளம் பெண்ணிடம் இருந்து 1 சவரன் நகை மற்றும் முதியோரை தாக்க பயன்படுத்தப்பட்ட ஸ்பேனர் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து விசாரணைக்குப் பிறகு அந்தப் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.