சென்னை புறநகர் பகுதியில் அடுத்தடுத்து 6 ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்க முயற்சி நடந்திருக்கிறது.
சென்னை ஆவடியை அடுத்துள்ள திருநின்றவூர் பிரகாஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேஷாத்ரி. இவர், கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கத்தால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த சில தினங்களாக மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் திருநின்றவூர் பகுதிகளில் உள்ள 6 ஏடிஎம் இயந்திரங்களை இரும்பு சுத்தியால் தாக்கி கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இதில், ஏடிஎம் இயந்திரத்தின் தொடுதிரை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதையடுத்து சேஷாத்ரி தானாகவே சுத்தியலுடன் திருநின்றவூர் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்த சம்பவம் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டாரா அல்லது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் திருநின்றவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.