சென்னை கீழ்ப்பாக்கம் கால்வாய் சாலை முதல் சந்தில் வசித்து வருபவர் வினோத் (44). இவரது வீட்டின் முதல் தளத்தில் நடராஜ் (65) என்பவர் கடந்த மூன்று வருடங்களாக குத்தகைக்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நடராஜின் மனைவி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில், நடராஜ் குடித்துவிட்டு வந்து அருகில் இருப்பவர்களிடம் பிரச்னை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் வினோத் நடராஜிடம் கூறியுள்ளார். அப்போது, உடனடியாக அட்வான்ஸ் தொகையை கொடுத்தால் வீட்டை காலி செய்வேன் என நடராஜ் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று நள்ளிரவு வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் எரிவதாக வீட்டின் உரிமையாளர் வினோத்திற்கு அருகில் இருந்தோர் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த 5 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.
இது குறித்து தகவல் அறிந்த டி.பி.சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நடராஜ் பெட்ரோல் ஊற்றி இருசக்கர வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நடராஜை போலீசார் தேடிவந்த நிலையில், அதிகாலை வீட்டிற்கு வந்த நடராஜை டிபி. சத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.