ஆவடி அருகே தனியார் தங்க நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரே போலி நகைகளை அசல் நகைகளுடன் கலந்து 28 சவரன் தங்க நகைகளை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
ஆவடி, சி.டி.எச் சாலை, செக்போஸ்ட் அருகே தனியார் நகைக்கடை உள்ளது. இங்கு அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையைச் சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், அடிக்கடி ஆவடி கிளை அலுவலகத்தில் இருந்து நகைகளை வாங்கிக் கொண்டு தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்று கொடுக்கும் பணியை செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி சதீஷ்குமாரிடம் 123 சரவன் தங்க நகைகளை தனித்தனியாக பாக்கெட் செய்து தி.நகர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொடுத்து அனுப்பியுள்ளனர். பின்னர், அங்கு அவர் அந்த நகைகளை ஒப்படைத்துள்ளார். அதன் பிறகு, அங்குள்ள அதிகாரிகள் அந்த நகைகளை பெங்களூருவில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளனர்.
நகைகளை அங்குள்ள அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில், 28.5 சவரன் நகைகள் கவரிங் என தெரியவந்தது. இது குறித்து, அங்கிருந்து ஆவடி கிளை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மேலாளர் ஜெயகர் (42) என்பவர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், சதீஷ்குமார் தங்க நகைகளை திருடி அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர் திருடிய நகைகளை கொரட்டூரில் வசிக்கும் காதலி, நண்பரிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, தனிப்படை போலீசார் கொரட்டூர், ஜானகிராமன் நகரை சேர்ந்த சதீஷ்குமாரின் காதலி ஷோபா (40), நண்பரான கொரட்டூர், கேஆர் நகரை சேர்ந்த ரஞ்சித் என்ற கண்ணன் (38) ஆகியோரை போலீசார் பிடித்தனர். பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 28.5 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் சதீஷ்குமார், ஷோபா, ரஞ்சித் மூவரையும் கைது செய்து அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.