குற்றம்

ஒரே நிறுவனத்தின் வெவ்வேறு நகைக்கடைகளில் திருட்டு: பெண்ணை பொறி வைத்து பிடித்த ஊழியர்கள்

ஒரே நிறுவனத்தின் வெவ்வேறு நகைக்கடைகளில் திருட்டு: பெண்ணை பொறி வைத்து பிடித்த ஊழியர்கள்

kaleelrahman

சென்னையில் ஒரே நிறுவனத்தின் வெவ்வேறு நகைக்கடை கிளைகளில் ஆபரணங்களைத் திருடிய பெண் பிடிபட்டார்.

வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள  நகைக்கடையின் கிளையில் பெண் ஒருவர் குழந்தையுடன் நகை வாங்க வந்துள்ளார். அவர் திரும்பிச் சென்ற பின்னர் நகையை சரி பார்த்துள்ளனர். அப்போது 11 கிராம் நகை காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் தாம்பரத்தில் உள்ள அதே நிறுவனத்தின் கிளையிலும் நகை வாங்குவது போல் நடித்து 24 கிராம் வளையல்களை திருடிச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சிசிடிவியில் சிக்கிய அந்த பெண்ணின் படத்தை அந்நிறுவனம் தங்களது கிளைகள் அனைத்திற்கும் அனுப்பி, எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியது. இந்நிலையில், தியாகராய நகரில் உள்ள அதே நிறுவனத்தின் மற்றொரு கிளைக்கு அப்பெண் சென்றுள்ளார். அப்போது அடையாளம் கண்ட கடையின் ஊழியர்கள் அவரை பிடித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பிறகு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் பிரியங்கா என்பதும், வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடமிருந்து 35 கிராம் தங்க நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.