முன்பகை காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பள்ளிக்கரணையை அடுத்துள்ள பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சரத் (25). இவர், நேற்று இரவு வீட்டு வாசலில் நின்றபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரத் மீது 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில், அவரது தலை சிதறி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பின்பு அதே கும்பல் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.
சம்பவம் குறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சரத்தை, கொலை செய்து விட்டு தப்பிய மர்ம கும்பலை பிடிப்பதற்காக பெரும்பாக்கம் ஆய்வாளர் சேட்டு மற்றும் வீரகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் பதிவாகி இருந்த வெற்றி, பிரவின், ஷியாம், வினோத், பிலிபால், சூர்யா உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சரத், வெற்றியை கடந்த 2019-ம் ஆண்டு அடித்து மண்டையை உடைத்ததாகவும், அப்போது முதல் வெற்றியிடம் தகராறு செய்து வந்ததால் ஆத்திரத்தில் நண்பர்களோடு சேர்ந்து நாட்டு வெடிகுண்டை தயாரித்து வீசி கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.