வடபழனி, ராகவன் காலனி பிரதான சாலையில் போஜராஜா என்பவர் வசித்து வருகிறார். தற்போது போஜராஜா மும்பையில் வசித்து வரும் நிலையில், 10 நாட்களுக்கு ஒருமுறை பணியாளர்கள் வீட்டை சுத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சுத்தம் செய்வதற்காக நேற்று பணியாளர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவுகள் திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர், போஜராஜா என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போஜராஜா மும்பையில் இருந்து வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார்.
அப்போது இவரது வீட்டை உடைத்து சுமார் 10 கிலோ வெள்ளி, 40 சவரன் தங்க நகைகள், குத்து விளக்கு இரண்டு, பூஜை சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடு போனதாக கடந்த எட்டாம் தேதி மாலை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு நபர்களை வடபழனி போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 450 கிராம் வெள்ளி, பூஜை சாமான்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. புகாரின் பேரில் வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.