arrested pt desk
குற்றம்

சென்னை | கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேர் கைது - 16 கிலோ கஞ்சா பறிமுதல்

திருநீர்மலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட நான்கு பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் திருநீர்மலை, திருமங்கயாழ்வார் புரத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் மணிமங்கலத்தைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரியவந்தது இதையடுத்து அவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Ganja

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு திருநீர்மலை சேசுராஜ் என்பவரிடம் வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதனடிப்படையில் சேசுராஜ் வீட்டிற்குச் சென்ற தனிப்படை போலீசார், வீட்டை சோதனை செய்தனர். அப்போது வீட்டு மாடியில் தண்ணீர் தொட்டிக்கு அடியில் 6 கிலோ கஞ்சாவை அவர் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த கலைவாணி மற்றும் வெள்ளை சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, தாம்பரம், பள்ளிகரணை, மணிமங்கலம், மதுரவாயல், பெரும்பாக்கம், ஓ.எம்.ஆர். பகுதிகளில் சிறிய பொட்டலம் போட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை பல்லாவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.