குற்றம்

சென்னை: கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றதாக 11 நாட்களில் 324 பேர் கைது

kaleelrahman

முழு ஊரடங்கில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனையை தடுக்க சென்னை காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 11 நாட்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக 324 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணியாக தமிழகம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு டாஸ்மாக் கடையும் மூடப்பட்டுள்ளது. இதனால் மதுபான பாட்டில்களை வெளி மாநிலத்தில் இருந்து கடத்திவந்து தமிழகத்தில் கள்ளச்சந்தையில் விற்று லட்சக்கணக்கில் பணம் பார்க்கின்றனர். அது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கண்காணித்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்திவந்து வீடுகளில் வைத்து விற்பனை செய்கின்றனர். மேலும், போதை தரும் சாராயம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து யூ-டியூப்பில் பார்த்து வீட்டில் வைத்தே சில இளைஞர்கள் சாராயம் தயாரித்து விற்கின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேனாம்பேட்டை பகுதியில் வீட்டில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக தகவல்கள் வரும்போது போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அரும்பாக்கத்தில், கர்நாடக மாநிலத்தில் இருந்து கண்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட ஆயிரக்கணக்கான மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர். சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பவர்களை கைது செய்ய சென்ற போலீசார் மீது தாக்குதல் சம்பவங்கள் சென்னையில் நடந்துள்ளது.

சென்னையில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை 11 நாட்களில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக 271 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய 324 குற்றவாளிகள் போலீஸ் பிடியில் விசாரணையில் உள்ளனர். இதில், 321 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 11 நாட்களில் மட்டும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சென்னையிலும் தயாரிக்கப்பட்ட சுமார் 4,176.57 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மதுபாட்டில்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 19 இருசக்கர வாகனங்கள், 2ஆட்டோக்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2 கண்டெய்னர் லாரிகள் என மொத்தம் 31 வாகனங்களை போலீசார் கடத்தல் ஆசாமிகளிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். ஒரே வாரத்தில் சென்னை போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல், தமிழகம் முழுவதும் இந்த மாதம் 1ம்தேதி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் மொத்தம் 25,461 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 92 வாகனங்களும், 2ம்தேதி சோதனையின் போது மொத்தம் 23,892 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 83 வாகனங்களும், 3ம்தேதி சோதனையின் போது மொத்தம் 15,262 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 75 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.