செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள காலி மைதானத்தில் கஞ்சா பதுக்கி வைக்கப்படுவதாக பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் நட்ராஜ்-க்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆய்வாளர் நட்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முர்குத்தி அப்பலநாயுடு (42), செம்மல் சத்தியபாபு (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை காட்டினர். இரண்டு மூட்டைகளில் 110 கிலோ கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து சென்னை புறநகர் முழுவதும் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து அவர்கள் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.