குற்றம்

சென்னை: ஒருதலை காதல் பிரச்னையில் 4 இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த இளைஞர்கள்

webteam

சென்னையில் ஒருதலை காதல் பிரச்னையில் 4 இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை டி.பி சத்திரம் 14வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் மார்டின் (வயது 51). ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவர், மனைவி மற்றும் மகன் அரவிந்தனுடன் வசித்து வருகிறார். இன்று அதிகாலை இவரது வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் உட்பட 4 இருசக்கர வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டிருந்தது.

தீப்பற்றி எரிந்த அந்த வாகனங்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மார்டின் அணைத்தார். இச்சம்பவம் தொடர்பாக டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் மார்டின் அளித்த புகாரின் பேரில் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு இரு இளைஞர்கள் வாகனங்களை கொளுத்திவிட்டுச் செல்வது பதிவாகியிருந்தது.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 23) மற்றும் ராணி அண்ணா நகரைச் சேர்ந்த சஞ்சய் குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், டிபி சத்திரம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை மார்டினின் மகன் அரவிந்தன் மற்றும் மணிகண்டன் இருவரும் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளனர். இதனால் மணிகண்டனுக்கும், அரவிந்தனுக்கும் இடையே இரு வருடங்களாக தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியொன்றில் அங்கு வந்த மணிகண்டனுக்கும், மார்டினின் மகன் அரவிந்தனுக்கும் தகராறு ஏற்பட்டதும், அதன் பின் அரவிந்தன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டனைத் தாக்கியதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து ஆத்திரத்தில் தனது நண்பனான சஞ்சய் குமாருடன் அரவிந்தனை தாக்க இன்று அதிகாலை அவரது வீட்டிற்கு வந்த மணிகண்டன், அரவிந்தன் வீட்டில் இல்லாததை அறிந்து வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மார்டினின் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்திச் சென்றதும் தெரியவந்தது. ஒரு வாகனத்திற்கு தீவைக்கப்பட்ட நிலையில் அந்த தீப்பரவி அருகே இருந்த வாகனங்களிலும் தீப்பிடித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக மணிகண்டன் மற்றும் சஞ்சய் குமார் ஆகிய இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.