குற்றம்

சென்னை: ஓய்வுபெற்ற பின்பு கோடிக்கணக்கில் லஞ்சம்; ஐசிஎஃப் முன்னாள் தலைமை பொறியாளர் கைது

Veeramani

பணியில் இருக்கும்போது தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக டெண்டர் ஒதுக்கீடு செய்து, ஓய்வுபெற்ற பின்னர் லஞ்சப் பணத்தை பெற்ற ஐசிஎஃப் முன்னாள் தலைமை பொறியாளரை சிபிஐ கைது செய்தது.

சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் டெண்டர்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொறியாளர் காத்பால் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பலனாக அவர் 5 கோடியே 89 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்த விசாரணை நடத்தி வரும் சிபிஐ, காத்பால், தனியார் நிறுவன இயக்குநர் உள்பட 4 பேரை கைது செய்தனர். அப்போது லஞ்சப் பணத்தை தனியார் நிறுவன இயக்குநரிடமே கொடுத்துவைத்திருந்ததும், ஓய்வுபெற்ற பின்னர் அதனை பெற திட்டமிட்டதும் தெரியவந்தது.

இதில் முதல் தவணையாக டெல்லியில் உள்ள அவரது சகோதரரிடம் தனியார் நிறுவனம் சார்பில் 50 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது. மேலும் லஞ்சப் பணத்தை காத்பாலிடம் வழங்கியபோது சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். காத்பாலுக்கு சொந்தமாக டெல்லி மற்றும் சென்னையில் உள்ள 9 இடங்களில் சோதனை நடத்திய சி.பி.ஐ அதிகாரிகள் சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய், 23 கிலோ தங்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.