குற்றம்

பாலியல் உறவுக்கு ஆள்வர லேட்டானதால் கோபம்: தொழிலதிபர் பாஸ்கரன் கொலை வழக்கில் நடந்த ட்விஸ்ட்

webteam

தொழிலதிபரும் சினிமா தயாரிப்பாளருமான பாஸ்கரன் கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளான். பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் கணேசனுக்கும் தயாரிப்பாளர் பாஸ்கரனுக்கும் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது.

ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் பாஸ்கரன்(67). இவர் ரியல் எஸ்டேட் தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டு வந்தவர். 90களில் சினிமா தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்.

நேற்று இரவு பாஸ்கரிடமிருந்து எந்த அழைப்பும் வராததால் அவருடைய மகன் தந்தை ஓட்டி வந்த காரின் ஜிபிஎஸ்-ஐ வைத்து சோதனை செய்தபோது, அது விருகம்பாக்கம் ஐஏஎஸ் ஐபிஎஸ் குடியிருப்பு அருகே இருப்பது தெரியவந்தது. ஆனால், போய் பார்த்தபோது காரில் தந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தந்தையை காணவில்லை என புகார் அளித்தார்.

இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் சின்மயா நகர் விருகம்பாக்கம் நெற்குன்றம் சாலையில் துப்புரவு தொழிலாளர்கள் சாலையோரம் கிடந்த பாலீதீன் மூட்டையை பார்த்தபோது, அதில் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கை கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி திணிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் காணாமல் போனவர் என புகார் அளிக்கப்பட்ட பாஸ்கரன் தான் கொலையானவர் என கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் குற்றவாளியை தேடி வந்தனர். குற்றவாளியாக தேடப்பட்டு வந்த கணேசன் என்பவர் திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு சென்ற தனிப்படை போலீசார் கணேசனை கைது செய்துள்ளனர்.

மேலும் போலீஸ் விசாரணையில், கணேசன் கடந்த சில வருடங்களாகவே பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாகவே கணேசன் உடன் தொடர்பு ஏற்பட்டு அடிக்கடி பாஸ்கரன் வந்து செல்வதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேபோல் நேற்றும் இதேபோன்று பாஸ்கரன் கணேசனை தேடி வந்திருக்கிறார். அப்போது பாலியல் தேவைகளுக்காக குறிப்பிட்ட இரண்டு பெண்களை பாஸ்கரன் கேட்டதாகவும் அதற்கு கணேசன், அவர்கள் வர தாமதமாகும் என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரன் கணேசனை கோபத்தில் வசைப்பாடி இருக்கிறார். அதன் பின்னர் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கணேசன் ஆத்திரத்தில் பாஸ்கரனை கீழே தள்ளிவிட்டதில் தலையில் அடிபட்டு மயங்கி இருக்கிறார்.

அதன் பின்னர் கணேசன் பாஸ்கரனை அருகே இருந்த தூணில் கட்டி போட்டு இருக்கிறார். மேலும் இரும்பு கம்பியால் தலையில் தாக்கியதாகவும், உயிரிழந்த பாஸ்கரனை கை, கால்களை கட்டி வாயில் துணி வைத்து பாலித்தீன் கவரில் பேக் செய்து சாலை ஓரம் வீசி சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.

கொலை நடந்த 24 மணி நேரத்துக்குள் தனிப்படை போலீசார் கொலை குற்றவாளி கைது செய்துள்ளனர். மேலும் இதில் ஒரே ஒருவர் தான் கொலை குற்றவாளி எனுவும், கும்பல்களாக சேர்ந்து யாரும் இந்த கொலையை செய்யவில்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.