கொளத்தூரில் நகைக்கடையின் மேற்கூரையை துளையிட்டு மூன்றரை கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைதுசெய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையை அடுத்துள்ள புழல் அருகே புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலையில், மகாலட்சுமி தங்க மாளிகை என்ற பெயரில் நகைக்கடை ஒன்று உள்ளது. கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த முகேஷ்குமார் என்பவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார். கடையின் மேல்தளத்தில் உள்ள ஒரு அறையை 10 நாட்களுக்கு முன் வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், துணிக் கடை நடத்துவதற்காக வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்நிலையில், மதிய உணவுக்காக முகேஷ்குமார் நேற்று பிற்பகல் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது, கடையில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கொள்ளை தொடர்பாக முகேஷ்குமார் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு சென்ற காவல் கூடுதல் ஆணையர் ஜெயராமன் தலைமையிலான காவல்துறையினர் கடையை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது கடையின் மேற்கூரையை துளையிட்டு அதன் வழியே நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதனிடையே நகைக் கடையின் மேல்தளத்தில் இருந்த துணிக்கடையை பூட்டிவிட்டு வட மாநில இளைஞர்கள் காணாமல் போய்விட்டதால் அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.நகைக் கடையில் சிசிடிவி கேமரா இல்லாத நிலையில், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில், கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் பைகளுடன் செல்லும் காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதனை அடிப்படையாக வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நகைக்கடைக்கு மேல் உள்ள தளத்தை வடமாநில இளைஞர்களுக்கு வாடகை விட்ட கட்டட உரிமையாளரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.