குற்றம்

லஞ்ச புகாரில் ஐ.சி.எஃப் முன்னாள் தலைமை பொறியாளர் கைது: மேலும் ரூ4.28 கோடி பறிமுதல்

Veeramani
சென்னை ஐ.சி.எஃப் - முன்னாள் தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் லஞ்சம் வாங்கி கைதான விவகாரத்தில், மேலும் 4 கோடியே 28 லட்ச ரூபாய் வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் டெண்டர்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி தலைமை பொறியாளராக இருந்தபோது, காத்பால் என்பவர் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பலனாக அவர் 5 கோடியே 89 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, காத்பால், தனியார் நிறுவன இயக்குநர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
காத்பாலுக்கு சொந்தமான டெல்லி மற்றும் சென்னையில் உள்ள 9 இடங்களில் சோதனை நடத்திய சி.பி.ஐ அதிகாரிகள் சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய், 23 கிலோ தங்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இரண்டாவது நாளாக நடத்தப்பட்ட சோதனையில் 4 கோடியே 28 லட்ச ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள், லாக்கர் சாவிகளை பறிமுதல் செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. டெண்டர் முறைகேட்டில் ஐ.சி.எஃப் சார்ந்த மற்ற அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.