குற்றம்

செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கு: ரவுடிகள் 2 பேரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்

நிவேதா ஜெகராஜா
நேற்று இரவு நேரத்தில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான செங்கல்பட்டு நகர காவல்நிலையம் எதிரில் இரட்டைக் கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த கொலை குற்றம் தொடர்பாக மொய்தீன், தினேஷ், ஜெசிக்கா, மாதவன் என பெண் உட்பட 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மொய்தீன் மற்றும் தினேஷ் 2 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு கே.தெரு பகுதியை சேர்ந்த அப்பு கார்த்திக் என்பவர் நேற்று இரவு டீக்கடைக்கு டீக்குடிக்க வந்துள்ளார். அப்போது
ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல், கார்த்திக்கை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அவர்மீது நாட்டு வெடிகுண்டு வீசி, தொடர்ந்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். மிகக்கொடூரமாக கார்த்திக்கை தாக்கிய அவர்கள், அவரை உரு தெரியாமல் தலையை சிதைத்துவிட்டு தப்பியோடி விட்டனர். இச்சம்பவத்தால், சம்பவ இடத்திலேயே அப்பு கார்த்தி துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்துவிட்டு, அந்நபர்கள் மூவரும் தப்பியோடினர். தப்பிச்சென்ற அவர்கள், செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியில் வாழும் காய்கறி வியாபாரி சீனுவாசன் என்பவரது மகன் மகேஷ் (வயது 22) என்பவரையும் சரமாரியாக வெட்டினர். வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மகேஷூம், இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்துள்ளார். ஒரே சமயத்தில் நடந்த இந்த இரட்டை கொலை சம்பவத்தால் செங்கல்பட்டு நகரமே பரபரப்பாக காணப்படுகிறது.

இருவரது உடலையும் மீட்ட செங்கல்பட்டு நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்திருந்தனர். தப்பியோடிய கும்பல் யார் முன்விரோதம் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர். அதன்முடிவில், ஒரு பெண் உட்பட நான்கு பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மொய்தீன் மற்றும் தினேஷ் 2 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். என்கவுண்டரில் அவர்கள் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கைதானவர்கள் நால்வரும், நாட்டு வெடிகுண்டு வீசி தப்பிக்க முயன்றதாகவும் - அதிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவே காவல்துறையினர் என்கவுண்ட்டர் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டு வெடிகுண்டு வீசியதில், இரண்டு காவலர்களுக்கு படுகாயம் அடைந்திருப்பதாக கூறப்படுகின்றது. தினேஷ் மற்றும் மொய்தீன் மீது ஏற்கெனவே கொலை உட்பட பல குற்ற வழக்குகள் இருப்பதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து மற்றவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை துரிதப்படுத்தப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முதற்கட்ட தகவலில் கொலைசெய்யப்பட்ட அப்பு கார்த்திக் மற்றும் மகேஷ் ஆகியோருடன் தினேஷ், மொய்தீன் ஆகியோருக்கு 2018 முதல் முன்விரோதம் இருந்துவந்ததாகவும், இவர்களில் மொய்தீன் மீது ஏற்கெனவே 3 கொலை வழக்குகளும், தினேஷ் மீது ஒரு கொலை வழக்கு உட்பட 4 வழக்குகளும் உள்ளதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.