குற்றம்

”உதயநிதி படத்தில் வாய்ப்பு வேண்டும்” -முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்

”உதயநிதி படத்தில் வாய்ப்பு வேண்டும்” -முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்

நிவேதா ஜெகராஜா

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சமையல்காரரை போலீசார் கைது செதுள்ளனர்.

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நாளை வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்து விட்டார்.

இது தொடர்பான தகவல் அறிந்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த நபரின் இடத்தை காவல்துறை கண்டறிந்தனர். வண்டலூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் பேசியிருக்கிறார் என்பது கண்டறியப்பட்டதை அடுத்து, தேனாம்பேட்டை போலீசார் அங்கு சென்று அந்நபரை கைது செய்தனர்.

விசாரணையில் அவரது பெயர் பழனிவேல் என்பதும், அவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. சென்னையில் தங்கி இருந்து சமையல் வேலை செய்து வந்துள்ளார் அவர். குடிபோதையில் முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும், தான் உதயநிதி ஸ்டாலினின் தீவிர ரசிகர் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உதயநிதி படத்தில் தனக்கு பட ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான பழனிவேலை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.