குற்றம்

சிறையில் சொகுசு வசதி பெற்ற வழக்கு: சசிகலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சிறையில் சொகுசு வசதி பெற்ற வழக்கு: சசிகலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Sinekadhara

லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதி பெற்ற வழக்கில் சசிகலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் இருந்தபோது சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சொகுசு வசதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பல வருடங்கள் ஆகியும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தினால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க சென்னையைச் சேர்ந்த கீதா என்ற சமூக ஆர்வலர் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தார். கடந்த 11ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவின்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாத காரணத்தினால், நீதிபதி கண்டிப்புடன் விசாரித்தவரை உள்ள தகவல்களை ஆகஸ்ட் 25ஆம் தேதி குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் சீல் செய்யப்பட்ட உறையில் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு, சசிகலாவிற்கு எதிரான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபிறகு இந்த வழக்கை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார். நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவின்படி இறுதியாக சசிகலாவிற்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.