புதுக்கோட்டையில் நள்ளிரவில் குடை பிடித்தபடி வந்த மர்ம இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி கேமரா காட்சி வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை நகர பகுதிக்குட்பட்ட நெல்லுமண்டி தெருவில் நகை பட்டறை நடத்தி வருபவர் ராஜீவ்காந்தி. இவர் நேற்று இரவு வழக்கம் போல் அவரது கடை வெளியே அவரின் யமஹா ஆர்எக்ஸ் 100 என்ற இரு சக்கர வாகனத்தை சைடு லாக் செய்து நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அவர் வாகனம் நிறுத்திய இடத்தில் மேலும் சில வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் குடை பிடித்தபடி வந்த மர்ம நபர் ஒருவர் வண்டியில் போடப்பட்டிருந்த சைடு லாக்கை கைகளால் உடைக்க முயற்சி செய்கிறார். ஆனால் அதில் லாக் உடையாததால் வாகனத்தை நிறுத்தி விட்டு பின்னர் முகத்தில் கைக்குட்டையை கட்டி வந்து அந்த இளைஞர் காலை வைத்து லாவகமாக சைடு லாக்கை உடைத்து அந்த இரு சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டே ஓடியுள்ளார்.
இதுகுறித்த காட்சிகள் அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து சிசிடிவி ஆதாரங்களுடன் ராஜீவ்காந்தி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம இளைஞர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.