குற்றம்

விருதுநகர் இளம்பெண் வழக்கு - மேலும் 30 பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்

Sinekadhara

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 30 பேரிடம் சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்துகிறது.

விருதுநகரில் பட்டியலின இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரை 6 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. முதலாவதாக 4 பேரையும் ஒரே அறையில் வைத்து விசாரணை நடத்திய சிபிசிஐடி பின்னர் நான்கு பேரையும் தனித்தனியாக வைத்து கிடுக்குபிடி விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின்மூலம் பல்வேறு கூடுதல் தகவல்களும் இவர்களின் நண்பர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதான சந்தேகமும் சிபிசிஐடி காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இரண்டு முறை மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலும், கைது செய்யப்பட்ட 8 பேருடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்களின் செல்போன்களை சைபர் க்ரைம் நடத்திய ஆய்வின் அடிப்படையிலும், கைது செய்யப்பட்ட 8 பேரின் நண்பர்கள் 30 பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

இவர்களுடன் நெருங்கி பழகிய நண்பர்கள், கடந்த 6 மாதத்தில் அடிக்கடி யாரிடம் அதிகமுறை தொடர்புகொண்டு பேசினார்கள், வாட்ஸ்அப்பில் யாரிடம் அதிகமுறை பேசியுள்ளார்கள் என்ற அடிப்படையில் நெருங்கிய நண்பர்களை சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது. அதன் அடிப்படையில் ஹரிஹரனுடன் கிரிக்கெட் விளையாடும் நண்பர்கள் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் மற்றவர்களிடம் அடுத்தடுத்த விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் வாட்ஸ்அப் குரூப்களில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் வீடியோ பகிரப்பட்டுள்ளதா என்பது குறித்தும் சிபிசிஐடி மற்றும் சைபர் க்ரைம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் சம்பவம் குறித்து எதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டார்கள், இளம் பெண்ணுக்கு எதுபோன்ற மிரட்டல்கள் கொடுக்கப்பட்டது என்பது குறித்த விசாரணை நடத்தி அதனை வாக்குமூலமாகவும் வீடியோபதிவும் செய்வதுடன் வழக்கிற்கான ஆதாரங்களையும் திரட்டி வருகின்றனர்.

இந்த வழக்கில் கைதாகியுள்ள மாடசாமியை அவரது இல்லத்திற்கும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வீட்டிற்கும் அழைத்து சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே 30 பேரிடம் நடத்தப்படும் முழுமையான விசாரணைக்குப்பிறகு வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.