குற்றம்

சேலம்: மகனின் ஆசைக்காக சிறிய ரக பைக் தயாரித்த தந்தை! பாய்ந்தது வழக்கு

நிவேதா ஜெகராஜா

சேலம் ஓமலூர் அருகே, சிறிய ரக மோட்டார் சைக்கிள் தயாரித்துக் கொடுத்து, தனது 7 வயது மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி தாலுகா உம்பிளிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் அதே பகுதியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 20 வருடங்களாக மெக்கானிக் தொழில் செய்து வரும் இவருக்கு, திருமணமாகி செல்வபிரியா என்ற மனைவியும், கிருத்திகா, ஜேசிகா ஆகிய இரண்டு மகள்களும், மோகித் என்ற மகனும் உள்ளனர். இவரது மகன் மோகித் தந்தை வேலை செய்யும் மெக்கானிக் பட்டறைக்கு செல்லும்போதெல்லாம் தனக்கு சிறிய மோட்டார் பைக்கை செய்து கொடுக்குமாறு கூறி வந்துள்ளார். மேலும், தந்தையிடம் ஐந்து வயதில் இருந்தே மோட்டார் பைக் வேண்டும் எனவும், கேடிஎம் வகை ரேஸ் பைக் மீது மோகித்திற்கு ஆர்வம் அதிகமாகவும் இருந்துள்ளது.

அதனால், அதேபோன்று பைக்கை நான் வடிவமைத்த தருவதாக தங்கராஜ் மகனிடம் கூறியுள்ளார். தொடர்ந்து மகனின் ஆசையை நிறைவேற்றும், வகையில் கடந்த ஒருவருடமாக தனது சொந்த முயற்சியால் சிறிய வகை கேடிஎம் பைக்கை சொந்தமாக வடிவமைத்து தயாரித்துள்ளார். மிகவும் அழகாக, பெரிய ரக பைக்கை சிறிய அளவில் பெண்கள் ஒட்டக்கூடிய வகையில் உருவாக்கியுள்ளார். இதையடுத்து குடியரசு தினத்தன்று பிறந்த அவரது மகனுக்கு பரிசளித்துள்ளார். தனது 7 வயது மகன் மோகித் அதை ஓட்ட முடியாது என தெரிந்தும் அவருடைய ஆசையை நிறைவேற்ற வீட்டின் வளாக பகுதியிலேயே தந்தை பின்னால் அமர்ந்துகொண்டு, சிறுவன் மோகித்தை சிறிய மோட்டார் சைக்கிளை ஓட்டு வைத்து, பின்னால் அமர்ந்து கவனித்து வந்துள்ளார் அவர்.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாகன ஓட்டநர் உரிமை இல்லை என்று தெரிந்தும், தனது மகனுடைய ஆசையை நிறைவேற்றிள்ளார். மேலும் தனது மகன் பைக் ஓட்ட விரும்பும்போது, பின்னால் அவரும் அமர்ந்து போக்குவரத்து இல்லாத தெரு சாலையில் பாதுகாப்பாக சிறிது தூரம் வண்டியை ஒட்ட வைத்து வந்துள்ளார். இதுபோன்ற சிறிய பைக்கை பார்த்த பொதுமக்கள் பலரும் தங்களுக்கும் இதுபோன்ற பைக் வேண்டும் என கோரிக்கை விடுத்தும், அவர் அதை மறுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த பைக் தயாரிக்க எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து உள்ளதாகவும், சுமார் ஒரு வருட காலம் இதற்காக உழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரதான சாலையில் அந்த சிறுவன், தந்தையை பின்னால் அமரவைத்து பைக் ஓட்டிச் சென்ற காட்சி சமீபத்தில் வெளியாது. இதைத்தொடர்ந்து மற்ற சிறுவர்களும் இதுபோன்ற அபாய செயலில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகக்கூறி புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து, தங்கராஜ் மீது தீவட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக வாகனம் தயாரித்தது, சிறுவனை வாகனத்தை இயக்க வைத்தது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.