குற்றம்

அண்ணா பல்கலை.-இல் போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம் - 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

webteam

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் போலி கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கியது தொடர்பாக 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நிகழ்ச்சியை நடத்திய நபர் தலைமறைவாகிவிட்டார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாதற்போது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. வெளித்தோற்றத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பட்டமளிப்பு விழா போல நடந்ததால் பல பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து கவுரவ டாக்டர் பட்டத்தை பெருமையுடன் பெற்று சென்றனர். இந்த நிகழ்ச்சியை நடத்திய "இன்டர்நேஷனல் ஆன்டி கரெப்க்ஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில்" அமைப்பு. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், நடந்த விழாவுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தாம் விருந்தினராக மட்டுமே பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியதிய நிலையில் அண்ணா பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் ரவிக்குமார் மயிலாப்பூர் துணை ஆணையரிடம், பட்டமளிப்பு நடத்திய அமைப்பு மீது புகார் அளித்துள்ளார். போலி ஆவணங்கள் மூலம் போலியான டாக்டர் பட்டத்தை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தை பயன்படுத்தி வழங்கப்பட்டுள்ளதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள இன்டர்நேஷனல் ஆன்டி கரெப்க்ஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில் இயக்குனர் ஹரிஷ் தங்களுடைய அமைப்புக்கு முறையான அங்கீகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஏமாற்றுதல், மோசடி செய்தல், அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.